Wednesday, 27 June 2012

Devar Ponmozhikal


ஆன்மீக ஞானி,
தேசியத் தலைவர்,
பொதுவுடைமைத் தலைவர்,
வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட
அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானியாரின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசு ஆட்சியை வகுக்கும்.



ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

இங்கே இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.

தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன் மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.

அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.

நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.

உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.